மைதானத்துக்கான காணியை வாங்குவதற்கான நிதி அன்பளிப்பு செய்தவர்களின் பெயர்களை தாங்கிய பெயர்ப்பலகை மைதானத்தில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
எமது பாடசாலைக்கு மைதானம் இல்லாமை பெரும் குறையாக இருந்த வேளையில் 1999 ஆம் ஆண்டு முன்னைநாள் அதிபர் மதிப்புக்குரிய திரு சு.முத்துக்குமாரசுவாமி அவர்களின் முயற்சியில் புலம்பெயர், குறிப்பாக லண்டன் வாழ் பழைய மாணவர்கள் மற்றும் தாயகத்தில் உள்ள பழைய மாணவர்கள் நலன்விரும்பிகளின் நிதி அனுசரணையில் முதல் பகுதி மைதானக்காணி வாங்கப்பட்டது. 2002இல் மீண்டும் ஒருபகுதி காணி வாங்கப்பட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டது. இறுதியாக 2018இல் மேலும் 4 பரப்பு காணி வாங்கப்பட்டது. மொத்தமாக 36 பரப்புக்கள் விஸ்தீரணம் கொண்ட மிகப்பெரிய மைதானம் உள்ள பாடசாலையாக எமது பாடசாலை அழகுற்று நிற்கின்றது. பல புலம்பெயர் பழைய மாணவர்களின் கனவாக இந்த மைதானம் அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எப்பொழுதும் பாடசாலை வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு புலம்பெயர் உறவுகள் செயற்பட்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டில் மைதானத்தை விஸ்தரிக்க மேலதிக காணியை வாங்க பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் முயன்ற போது சுவிஸ் பழைய மாணவர் சங்கமும் கனடா வாழ் பழைய மாணவர்களும் பெருமளவு நிதியை சேகரித்து உதவியிருந்தனர். பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் மனமகிழ்வோடு நிதியை அன்பளிப்பு செய்திருந்தனர். மேலும் பிரான்ஸ்,ஜேர்மனி,சிங்கப்பூர்,நியூஸிலாந்துபோன்ற நாடுகளில் இருந்தும் ஏனைய புலம்பெயர் பழைய மாணவர்களும் இணைந்து உயர்ந்த கைங்கரியத்தை செய்து முடித்திருந்தனர்.
பிரித்தானிய பழையமாணவர் சங்கம் முன்னெடுத்த இந்த செயற்றிட்டத்தின் போது ”மைதானம் வாங்குவதற்கு நிதிப்பங்களிப்பு செய்த பழைய மாணவர்கள்,நலன்விரும்பிகளுடைய பெயர்கள் பெயர்ப்பலகையில் பொறிக்கப்படும்” என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தோம். அந்த உறுதிமொழியை சிறிது காலம் தாமதித்தாவது நிறைவேற்றியுள்ளோம் என்பதில் மகிழ்வடைகின்றோம்.
மைதானத்தில் பெயர்ப்பலகையானது கடந்த 20.10.2021 அன்று பாடசாலை அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள்,தாய்ச் சங்க உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் முன்னிலையில் புலம்பெயர் உறவுகளின் சார்பாக பிரித்தானியாவில் இருந்து தாயகம் சென்றிருந்த பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு சண்முகதாஸ் கிருபானந்தன் அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டது. இன்றைய இடர்நிலையிலும் பெயர்ப்பலகை அமைத்து திரைநீக்கம் செய்ய உதவிய தாய்ச்சங்க நிர்வாகத்தினருக்கும் பாடசாலை சமூகத்துக்கும் எமது நன்றிகள்.